

கடலூர்: புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, பாமக சார்பில் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, அங்கிருந்த விசிக கொடிக் கம்பத்தை பெண் ஒருவர் கடப்பாரையால் அடித்து உடைத்தார். இது தொடர்பாக மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மருதூர் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில், பாமக மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ், கட்சியினர் சங்கர், அருள்செல்வி, அருள், கண்ணன், ஆகாஷ், பாண்டியன், முருகவேல், சிவனேசன், சூரியபிரகாஷ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இவர்களில் அருள் (38) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
விசிக மகளிரணி நிர்வாகி கைது: கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை, பு.உடையூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தாக்கினர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யக் கோரி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இது தொடர்பாக புவனகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலர், பாமக நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பாமக புவனகிரி நகரச் செயலாளர் கோபிநாத் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில், விசிக மாநில மகளிரணி துணைத் தலைவர் செல்வராணி, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர்கள் அரங்க தமிழ் ஒளி, அறிவுடைநம்பி, நீதிவள்ளல், முன்னாள் செயலாளர் செல்லப்பன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாநில மகளிரணி துணைத் தலைவர் செல்வராணியைக் கைது செய்துள்ளனர்.