

சென்னை: ஜெஜெ நகரில் கஞ்சா, போதை மாத்திரைகள் ஆன்லைனில் விற்பனை செய்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஜெஜெ நகர் பாரி சாலை பகுதியில் ஜெஜெ நகர் போலீஸார் கடந்த 3-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா, போதை மாத்திரையுடன் ஜெஜெ நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்ற இளைஞர் சிக்கினார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், போதை மாத்திரைகளை விற்ற மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி(20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல்(21), மறைமலைநகரைச் சேர்ந்த திரிசன் சம்பத்(20), ஆருணி(20) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதும், ஆன்லைன் மூலம் போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து மொத்தம் 94 போதை ஸ்டாம்புகள், 48 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மேலும் ஒரு மாணவி உள்பட 8 மாணவர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் ஒரே தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களது அறையை போலீஸார் சோதனை செய்தபோது, ஏராளமான, போதை மாத்திரைகள், கஞ்சா, போதை ஸ்டாம்புகள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள் அனைவரும் ‘ரெடிட்’ என்ற செயலி மூலம் அறிமுகமாகி அதில் போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை கொடுப்பது யார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.