

புதுச்சேரி: பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை அதிக விலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று வந்த பேஸ்புக் பதிவை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்தவர் ரூ.35 ஆயிரம் பணத்தை இழந்துள்ளதால் சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ராஜேஷ் (55), என்பவர் பேஸ்புக் பக்கத்தில் உங்களிடம் பழங்கால நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் இருந்தால் நாங்கள் மிக அதிக விலை கொடுத்துக் வாங்கிக் கொள்கிறோம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். இதில் குறிப்பிட்ட எண் மூலம் அதிலுள்ள நபர்களை தொடர்பு கொள்கிறார். அதற்கு அவர்கள்," உங்களிடம் என்ன இருக்கிறது" என்று கேட்கும் பொழுது "50 வருடத்திற்கு முந்திய ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று இருக்கிறது" என்று ராஜேஷ் குறிப்பிட்டார்.
அவர்கள்," அதை உங்கள் அருகில் வைத்து புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்- நாங்கள் உண்மையிலேயே அது பழங்கால நோட்டு தானா என்று சோதனை செய்துவிட்டு அழைக்கிறோம்" என்று சொல்கிறார்கள். அதையடுத்து புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்.
அடுத்து ஒரு மணி நேரத்தில் தொடர்பு கொண்டு," இது பழங்கால நோட்டு தான். நாங்கள் இதை 4 லட்சம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறோம்" என்று கூறிவிட்டு "எங்கள் ஆட்கள் உங்களிடம் வந்து அந்த ஐந்து ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டு உடனடியாக உங்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவார்கள். உங்களுக்கு எந்த வங்கியில் பணம் செலுத்த வேண்டுமோ அந்த வங்கியில் இருந்து எங்களுக்கு முதலில் ஆயிரம் ரூபாய் பணம் அனுப்புங்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ராஜேஷ் அனுப்பி வைக்கிறார்,
தரப்படவுள்ள ரூ. 4 லட்சம் ரூபாய்க்கு ஜிஎஸ்டி இன்னும் சில வரிகள் இருப்பதால் முதலில் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை எங்களுக்கு அனுப்புங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதையடுத்து பணம் 35 ஆயிரம் ரூபாய் அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் ராஜேஷ்க்கு வரவில்லை.
இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் புகார் தந்தார். சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் இணைய வழி மோசடி நபர்களிடம் ஏமாந்ததாக இருபதுக்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் இணைய வழியில் வருகின்ற எந்த ஒரு விளம்பரம், வேலை வாய்ப்பு, அதிக பணம் தருகிறோம் , உங்கள் பிள்ளைகளை கைது செய்துள்ளோம், உங்கள் பார்சலில் போதைப்பொருள் உள்ளதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் போன்ற தகவல்கள் வந்தாலும் நம்ப வேண்டாம். 1930 என்ற இணைய வழி காவல் நிலையத்திற்கு ஆன்லைனில் புகார் செய்யுங்கள்" என்றனர்.