

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள், வானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டு இருக்கிறது. விமான நிலையங்களிலும், விமானங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், அனைத்தும் வெறும் புரளி என்பது உறுதியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கும், சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட் டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் சென்னையில் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 3 நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் எதுவும் வராத நிலையில், நேற்று முன்தினம் விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தி, பாதுகாப்பை பலப்படுத்தினர். விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதிகள் அனைத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். நள்ளிரவில் தொடங்கிய சோதனை நேற்று காலை வரைநீடித்தது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இது வழக்கம்போல் புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.