

சென்னை: அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நாசியாஎன்ற மனைவியும், 6 வயதில் குழந்தையும் உள்ளனர்.
நவாஸின் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், தனது வீட்டு குளியலறையில், வீட்டுவேலை பார்த்து வந்த சிறுமி உயிரிழந்து கிடப்பதாக அமைந்தகரை போலீஸாருக்கு, நவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சிறுமியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், நவாஸ் மற்றும் அவரது மனைவி நாசியாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 31-ம் தேதி தீபாவளி பண்டிகையன்று, அந்த சிறுமி வேலை முடிந்து குளிக்கச் சென்றதாகவும், பின்னர் நீண்ட நேரமாக சிறுமி வெளியே வராததால் கணவன் - மனைவி இருவரும் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடந்ததாகவும், இதனால் பயத்தில் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், பிறகு மறுநாள் மாலை இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததாகவும், போலீஸாரிடம் கூறினர்.
ஆனால், சிறுமி சரியாக வேலை செய்யாமல் இருந்ததால், கணவன் - மனைவி இருவரும் அடிக்கடி சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகவும், தீபாவளியன்று சிறுமியை பலமாக அடித்ததால், சிறுமி உயிரிழந்த தாகவும் கூறப்படுகிறது. மேலும், நவாஸின் நண்பர் லோகேஷ் என்பவரும் சிறுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து லோகேஷ் (25), அவரது மனைவி ஜெய சக்தி (24), சீமா (39), முகமது நபாஸ் வீட்டின் பணிப்பெண் மகேஸ்வரி (44) ஆகிய 4 பேரையும் நேற்று போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.