

சென்னை: வேளச்சேரியில் நடந்த கார் விபத்தில் சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் உயிரிழந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர்கார்த்திக். இவரது மகன் நித்திஷ். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் ஓஎம்ஆர் சாலையில் உள்ள விளையாட்டுத் திடலுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு விளையாடி முடித்துவிட்டு, காரில் வீடு திரும்பினார்.
வேளச்சேரி பகுதியில் கார் வேகமாக வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில்மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் நித்திஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நித்திஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி தினத்தில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.