

தென்காசி: செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டது. இரவு 7.15 மணி அளவில் கடையநல்லூர் - பாம்புகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, தண்டவாளத்தில் 2 கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக ரயிலை நிறுத்திய லோகோ பைலட் கற்களை அப்புறப்படுத்திவிட்டு, தொடர்ந்து ரயிலை இயக்கினார். தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே ரயில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி இரவு கடையநல்லூர்-பாம்புகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் மீது மோதியதில் ரயில் இன்ஜினின் முன்பக்க இரும்பு பேனல் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில், அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் பணியாற்றிவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பால்சிங் பகேல் (21), ஈஸ்வர் மேடியா (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களது செல்போனில், ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த வீடியோ இருந்ததால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது மீண்டும் அதே பகுதியில் பொதிகை ரயிலை கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.