

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியில் ஏரிக்குள் கார் பாய்ந்ததில், நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஓசூர் உழவர் சந்தை அருகேயுள்ள உமாசங்கர் நகரைச் சேர்ந்தவர் மகேஷ்(25). பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்கள் ஓசூர் ஜி.கே.டி.நகரைச் சேர்ந்த லிண்டோ (25), சின்ன எலசகிரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் யோகேஸ்வரன் (25). இவர்கள் 3 பேரும் கடந்த 30-ம் தேதி இரவு ஓசூர் அருகேயுள்ள வெங்கடாபுரத்தில் இருந்து பாகலூருக்கு காரில் சென்றனர்.
காரை லிண்டோ ஓட்டினார். வெங்கடாபுரம் ஏரிக்கரை அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமுள்ள ஏரிக்குள் பாய்ந்து நீரில் மூழ்கியது. தகவலறிந்து வந்த பாகலூர் போலீஸார், கிரேன் உதவியுடன் காரை வெளியே எடுத்தனர்.
காருக்குள் இருந்த மகேஷ், லிண்டோ ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். யோகேஸ்வரனை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். நீண்ட தேடலுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. விபத்து குறித்து பாகலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்புச் சுவர்... கடந்த ஆகஸ்ட் மாதம் இதே ஏரியில் கார் பாய்ந்தது. ஏரியில் தண்ணீர் இல்லாததால் 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். தற்போது பெய்த மழையால் வெங்கடாபுரம் ஏரி நிரம்பியுள்ளதால், கார் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். எனவே, விபத்துகளை தடுக்க வெங்கடாபுரம் ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.