டூவீலர் சாகசத்தால் விபரீதம்: இரண்டு பைக்குகள் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு

பைக் விபத்தில் பலியான சஞ்சய், சேவாக்,லிங்கேஷ் (இடமிருந்து வலம்)
பைக் விபத்தில் பலியான சஞ்சய், சேவாக்,லிங்கேஷ் (இடமிருந்து வலம்)
Updated on
1 min read

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூரில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் லிங்கேஷ் (24),சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ் (22), கேசவன் (22). நண்பர்களான ஐந்து பேரும் வெவ்வேறு வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்கள். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று (அக்.31) மாலை கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் ஒரு பைக்கிலும், இரண்டு பேர் ஒரு பைக்கிலும் ஏறிச்சென்றனர். அதி வேகமாக செல்வது, திடீரென பிரேக் பிடிப்பது, முன் வீலை தூக்கியபடி செல்வது உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதனிடையே இரண்டு டூவீலர்களும் எதிரெதிரே வேகமாக வந்தன. அப்போது ஆதி சுஞ்சனகிரி மடத்தின் அருகே அதி வேகமாக வந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் பயங்கரமாகமோதியது. இதில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் நொறுங்கியது. இதில் லிங்கேஷ் மற்றும் சேவாக் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மூன்று பேரில் சஞ்சய் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். படுகாயத்துடன் மோனிஷ், கேசவன் ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசேஷ தினத்தன்று நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in