

சென்னை: கிரிப்டோ கரன்சியாக மாற்றித் தருவதாக துபாய் நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ``எங்களது அலுவலகத்தின் கிளை அலுவலகம் துபாயில் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்துக்கு தேவையான பணத்தை கிரப்டோ காயினாக மாற்றி அனுப்புவது வழக்கம்.
இந்நிலையில் குறைவான விலைக்கு கிரிப்டோ காயினாக மாற்றித் தருவதாக சிலர் தங்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறினர். முதல் கட்டமாக ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீஸாரின் விசாரணையில், மோசடியாக பறிக்கப்பட்ட பணம் தேனியில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் அந்தப் பணத்தை எடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் தேனிக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டபோது, மோசடிக்காரர்கள் அப்பாவி நபர்களிடம் கமிஷனாக மிகக் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கை பெற்றுக் கொள்வார்கள்.
பின்னர் தனியார் நிறுவனங்களிடம் குறைந்த விலையில் கிரிப்டோ காயினாக மாற்றித்தருவதாகக் கூறி, மோசடியாக பறிக்கப்பட்ட பணத்தை அப்பாவி பொதுமக்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்த வைப்பார்கள். பின்னர், அந்தப் பணத்தை மோசடிக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வகை மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அபிராஜா (29), அதே மாவட்டம் பல்லவராயன்பட்டி லோகநாதன் (23), மதுரை பொன்மேனி நகர் அஸ்வந்த் (23), தேனி குமரேசன் (28), மகேஷ்குமார் (25), கரூர் முகமது இஸ்மாயில் பர்வேஷ் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 92,000, 8 செல்போன்கள், 3 ஐபேடுகள், 33 சிம்கார்டுகள், 20 ஏடிஎம் கார்டுகள், 4 வங்கிக் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.