

சென்னை: அமெரிக்கா செல்ல போலியான ஆவணங்கள் தயார் செய்து கொடுத்ததாக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஒருவர் கடந்த 22-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், அஜய்குமார் பண்டாரி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்ல, விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். 22-ம் தேதி நேர்முக தேர்வுக்கு வந்தவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது கல்வி சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ்கள் போலியாக இருந்தது தெரியவந்தது. எனவே, போலி சான்றிதழ் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
போலி சான்றிதழ்கள்: இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி ஆவண புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஷீஜா ராணி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் பாலநந்தேஸ்வர ராவ் (47), இதேபோல் வேறு ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் அதே மாநிலம் நிசாமாபாத்தைச் சேர்ந்த கப்சே மகேஷ் (49) ஆகிய இருவரும் போலியான கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை செய்ததுபோல போலி அனுபவ சான்றிதழ்களை ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வழங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் சென்னை போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர். மேலும், அவர்களது அலுவலகத்தில் சோதனை நடத்தி 90-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்துள்ளனர். போலி சான்றிதழ்கள் பெற்று அமெரிக்க துணை தூதரகம் சென்ற அஜய்குமார் பண்டாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.