

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்குச் சென்ற திருச்சி நிர்வாகிகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்து, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிவாசன் தலைமையில் 5 பேர் ஒரு கார் மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஷேக் உசேன் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலை நடுவே உள்ள சென்டர் மிடியனில் கார் மோதியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையின் இடதுபுறத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
பின்னால் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், காயமடைந்தவர்களை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கலையரசன் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து எடைக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.