மும்பை போலீஸ் என மிரட்டி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.1.18 கோடி பறிப்பு: 6 பேர் கும்பல் கைது

மும்பை போலீஸ் என மிரட்டி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.1.18 கோடி பறிப்பு: 6 பேர் கும்பல் கைது
Updated on
1 min read

சென்னை: மும்பை போலீஸ் என மிரட்டி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.1 கோடியே 18 லட்சம் பறித்த வழக்கில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேர் கும்பலை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், பெடெக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் உள்ளது எனவும் இதுதொடர்பாக மும்பை போலீஸார் பேசுவார்கள் என கூறி இணைப்பை வேறு எண்ணுக்கு மாற்றி உள்ளார்.

அதில், பேசிய நபர் போதைப் பொருள் கடத்தல் மூலம் நீங்கள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம். எனவே, நீங்கள் குற்றமற்றவர் என நிரூபிக்க உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள். நாங்கள் சரி பார்த்த பின்னர், உங்கள் பணத்தை உங்களுக்கே அனுப்பி வைத்து விடுகிறோம். அப்படி செய்யவில்லை என்றால் கைது நடவடிக்கை பாயும் என மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்து போன் சென்னை தொழில் அதிபர் மும்பை போலீஸ் என கூறிய நபர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.1 கோடியே 18 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் எதிர்தரப்பினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர் இதுகுறித்து மாநில சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ்பாய் பதயாய் போக்ரா, முகவராக செயல்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவேக் பெலாடியா தமாஜ்பாய், பரேஷ் நரஷிபாய் கல்சாரியா, சாஹில், ஷாருக்கா குஜராத்தைச் சேர்ந்த விபுல் பாகுபாய் கோவதியா ஆகிய 6 பேரை கைது செய்தனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் வெளிநாட்டிலிருந்து செயல்படுவதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். அந்த கும்பலை பிடிக்கும் நடவடிக்கையையும் சைபர் க்ரைம் போலீஸார் தொடங்கி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in