

ஓசூர்: தளி அருகே கோழிப் பண்ணையில் விளையாடிய போது, தீவன மூட்டைகள் சரிந்ததில் 2 பெண் குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது நிலத்தில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இப்பண்ணையில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜகவுல்லா என்பவர் தனது மனைவி சகிலா காதூன், மகள்கள் சார்பானு (4) மற்றும் ஆயுத் காதூன் (3) ஆகியோருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கோழி பண்ணையில் நேற்று சிறுமிகள் சார்பானு, ஆயுத் காதூன் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த தீவன மூட்டைகள் குழந்தைகள் மீது சரிந்து விழுந்தன. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 2 குழந் தைகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த, தளி போலீஸார், 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.