

ஹைதராபாத்: ஓட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிடச் சென்ற வாலிபரை, நாய் துரத்தியதால், தப்பிக்க முயன்ற வாலிபர், 3-வது மாடியில் இருந்து குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் உதய் (23). இவர் ஹைதராபாத்தில் உள்ள ராமசந்திராபுரம் அஷோக் நகரில் வசித்து வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, தனது நண்பர்களுடன் சந்தாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். நண்பர்கள் அனைவரும் அந்த ஓட்டலின் 3-வது மாடிக்கு (ரூஃப் கார்டன்) சாப்பிட சென்றனர். அப்போது, அங்கிருந்த நாய் ஒன்று, வாலிபர் உதய்யை பார்த்ததும் குரைத்துக்கொண்டே அவரை துரத்தியது.
ஏற்கெனவே சிறு வயது முதலே நாய்கள் என்றால் பயம் கொண்டுள்ள உதய், நாய் துரத்தி வருவதை பார்த்து பயந்து போய் ஓட்டலின் பால்கனியில் ஓடியுள்ளார். அங்கும் நாய் துரத்தி கொண்டே வந்ததை பார்த்து, உடனே அங்குள்ள ஒரு ஜன்னலை திறந்து, அதன் வழியாக கீழே குதித்துள்ளார். ஆனால், அது 3-வது மாடி என்பதால், நேராக சாலையில் விழுந்து உதய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தை ஓட்டல் நிர்வாகம் மறைத்து விட்டது. நேற்று உயிரிழந்த உதய்யின் நண்பர்கள் தெரிவித்த தகவலால் இந்த உண்மை வெளியே வந்தது. இது குறித்து தற்போது சந்தாநகர் போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.