

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தமானில் இருந்து சென்னைக்கு நேற்று பகல் 1 மணிக்கு வரும் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டு செல்ல இருந்தது. அந்த விமானத்தில் அந்தமான் செல்வதற்காக 99 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது, சென்னையில் உள்ள ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ரீஜினல் மேனேஜர் அலுவலகத்துக்கு பிற்பகல் 2.30 மணியளவில் வந்த இ-மெயிலில், அந்தமான், டெல்லி, புனே, கோவா மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் ஸ்பெஸ் ஜெட் விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டி ருந்தது. இதுபற்றி உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு அந்தமானுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படத் தயாரா னது. உடனடியாக அந்த விமானத்தில் பயணிகள் யாரையும் ஏற்றாமல், விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. விமானத்துக்குள் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்தனர்.
விமான நிலைய ஓடுபாதை பகுதி மற்றும் பயணிகள்தங்கி இருக்கும் இடங்கள் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப் பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லாததால், இது வழக்கமான வதந்தி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, 99 பயணிகளுடன் விமானம் மாலை 4.20 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.