

செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் நேர்காணலின் போது கைதிக்கு வீடியோ கால் பேச மொபைல் போன் போன் கொடுத்த பெண் வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் அடிதடி வழக்கில் கைதான ஆனந்தன் என்கிற கல்லறை ஜான் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று பார்வையாளர் நேரத்தின் போது, விசாரணை கைதி ஆனந்தனை பார்க்க, சென்னை - கே.கே.நகரை சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி (26) சிறைக்கு வந்தார்.
அப்போது, கைதி ஆனந்தனை பார்த்ததும், அவரிடம் பிரியதர்ஷினி, வீடியோ காலில் பேச தன் மொபைல் போனை கொடுத்துள்ளார். இதனை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அறிந்த சிறைக் காவலர்கள், கைதி ஆனந்தனுக்கு வழக்கறிஞர் பிரியதர்ஷினி கொடுத்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த புழல் போலீஸார், வழக்கறிஞர் பிரியதர்ஷினியை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர் போலீஸார். மேலும், ஏற்கனவே சிறை வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக சிறை காவலர்களிடம் வழக்கறிஞர் பிரியதர்ஷினி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என, கூறப்படுகிறது.
கைதி ஆடையில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பறிமுதல்: புழல் மத்திய சிறையில், சிறை காவலர்களின் சோதனையின் போது அவ்வப்போது தடை செய்யப்பட்ட கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில், கஞ்சா வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 10-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட, குடியாத்தத்தைச் சேர்ந்த இம்ரான் என்ற கைதி ஆடையில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இம்ரானிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் சிறை அதிகாரிகள். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.