

மசினகுடி: மசினகுடி பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ளதா என மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில் குமார் தலைமையில் போலீஸார் மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தினர்.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில் குமார் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா ஆகியோர் இன்று மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கனல்லா முதல் தெப்பக்காடு வரை நக்சல் தடுப்பு வேட்டை அலுவலக நக்சல் தடுப்பு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர். பின்னர், நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வரும் நக்சல் தடுப்பு பிரிவினர்களுக்கு தேவையான உடற்பயிற்சி உபகரணங்களை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் வழங்கினார். கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர்.