

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையம் வந்த, நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடிபணத்துடன் 3 பேர் பிடிபட்டனர்.
பிடிபட்ட நபர்கள், தமிழக பாஜகசட்டப்பேரவை கட்சித் தலைவரும், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. அந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக எடுத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதை அவர் மறுத்தார்.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தொழில் பிரிவு மாநிலத் தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். கேசவ விநாயகத்திடம் 7-ம் தேதிமீண்டும் விசாரணை நடந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலபாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான எஸ்.செல்வகணபதி, சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கஜ் லால்வாணி, சூரஜ்ஆகிய 3 பேரும், வரும் 25-ம் தேதிசென்னை எழும்பூரில் உள்ளசிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.