

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்துக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த,பள்ளி மாணவர்கள் இருவரை கடுமையாக எச்சரித்த போலீஸார், அவர்களிடம் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், “சென்னை விமான நிலையத்தில், கழிவறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. சற்று நேரத்தில் அது வெடிக்கும்” எனக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பரபரப்படைந்து, விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து, சென்னை விமான நிலையத்தில் கழிவறைகள் மற்றும் உள்பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலைய போலீஸார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எண் சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒருவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது, அவரது மகனும், உறவினர் ஒருவரின் மகனும் சேர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்தது.
இருவரும் அப்பகுதியில் உள்ள வெவ்வேறு தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரிடமும் விமான நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து எச்சரித்தனர். அதேபோல் மாணவர்களையும் கடுமையாக எச்சரித்தனர். அதோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறினர். அதன் பின்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.