

கொச்சி: மும்பை போலீஸ் அதிகாரிகள் போல நடித்து பிரபல மலையாள நடிகை மாலா பார்வதியிடம் பணம்பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஷ்மா பர்வம், கோதா, டேக் ஆஃப், மாலிக், நீலதாமரா போன்றபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் மாலா பார்வதி. இவர், கடந்த 2007-ம் ஆண்டு முதல் மலையாள பட உலகில் நடித்து வருகிறார்.
மதுரையில் படப்படிப்பில் இருந்தபோது இவரிடம் மும்பை போலீஸ் அதிகாரிகள் என்று கூறி போலியான ஐடி கார்டை காண்பித்து வீடியோ காலில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இவரது, பெயர் மற்றும்ஆதாரை பயன்படுத்தி தைவானுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், அதனை தாங்கள்கைப்பற்றியுள்ளதாகவும் கூறி நடிகையை மிரட்டியுள்ளனர். மேலும், நடிகையின் பெயரில் 12 மாநிலங்களில் வங்கி கணக்குஆரம்பித்து பணமோசடி நடைபெற்றதாகவும் கூறியுள்ளனர்.
இதனிடையே, மும்பை குற்றப் பிரிவு போலீஸ் ஐடி கார்டை காண்பித்து பிரகாஷ் குமார் குண்டு என்பவர் நடிகையிடம் வழக்கை சுமுகமாக முடிக்க பேரம் பேசியுள்ளார் . ஆனால், அவரின் ஐடி கார்டை பார்த்தபோது அசோகாபில்லர் சின்னம் அந்த அடையாள அட்டையில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, கூகுள் செய்து பார்த்த போது அது மோசடி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, உஷாரான நடிகையின் மேலாளர் திரும்ப பிரகாஷை தொடர்பு கொண்ட போது யாரும் பதிலளிக்கவில்லை. மோசடி அம்பலமாகி விட்டதை உணர்ந்த அந்த மோசடி கும்பல் நடிகையுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது. பண மோசடியும் தடுக்கப்பட்டது. எனவே, இதுபோன்ற மோசடிஅழைப்புகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நடிகை மாலா பார்வதி வலியுறுத்தி உள்ளார்.