Published : 15 Oct 2024 06:02 AM
Last Updated : 15 Oct 2024 06:02 AM

அமைச்சர், நீதிபதி பயணிக்க இருந்த சென்னை விமானத்தை கடத்துவதாக மிரட்டல்: மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை

கோவை: கோவையிலிருந்து சென்னைக்கு புறப்பட இருந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகளை வெளியே வரவழைத்து, விமானத்தை போலீஸார் சோதனையிட்டனர்.

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை செல்வதற்காக விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர், விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டுச் சீட்டை விமான ஊழியர்கள் பார்த்தனர்.

பயணிகள் வெளியேற்றம்: அதில், அந்த விமானத்தை கடத்தப் போவதாக கூறப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், பீளமேடு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த விமானத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆகியோரும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் இணைந்து விமானம் முழுவதும் சோதனை செய்தனர்.

மிரட்டல் புரளி: மேலும், பயணிகளின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விமானம் கடத்தப்படுவது என்ற மிரட்டல் புரளி எனத்தெரிந்தது. இதையடுத்து, பயணிகள் மீண்டும் விமானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர், மாலை 5.30 மணிக்கு அந்த விமானம் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x