ஜெயங்கொண்டம் அருகே பிளஸ்1 மாணவன் மர்ம மரணம்: போலீஸார் விசாரணை

கதிர்செல்வன்
கதிர்செல்வன்
Updated on
1 min read

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே பிளஸ்1 மாணவன் மர்ம மரணம் அடைந்திருக்கிறார். இந்நிலையில் போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கதிர்செல்வன்(16). இவர் அருகேயுள்ள உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 3 தினங்களாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் கதிர்செல்வன் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதிர்செல்வனை தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனிடையே, சிதம்பரம் - ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே, மாணவன் ஒருவன் இறந்துகிடப்பதாக மீன்சுருட்டி போலீஸாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தது கதிர்செல்வன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீஸார், கதிர்செல்வனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடந்து, கதிர்செல்வன் இறப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in