

காரைக்கால்: போலி ஆவணம் தயாரித்து, காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை விற்க முயன்ற புகாரில் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக, காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பதாகவும், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், துணை ஆட்சியர் ஜி.ஜான்சனை கடந்த 10-ம் தேதி பிற்பகல் போலீஸார் அழைத்துச் சென்று, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் ஜான்சனை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜான்சன் சிறையில் அடைக்கப்பட்டார். கோயில் நிலமோசடி வழக்கில் மாவட்ட உயரதிகாரி கைது செய்யப்பட்டது காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.