Published : 11 Oct 2024 08:04 AM
Last Updated : 11 Oct 2024 08:04 AM

தாழையூத்து ஊராட்சி முன்னாள் தலைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: தாழையூத்து ஊராட்சி முன்னாள் தலைவியை கொல்ல முயன்ற வழக்கில், முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி அருகேயுள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்த பொய்யாமணி மனைவி கிருஷ்ணவேணி (50). 2011-ல் இவர் தாழையூத்து ஊராட்சித் தலைவியாகப் பொறுப்பு வகித்தார். அப்பகுதியில் கழிப்பறை கட்டுவதுதொடர்பாக அவருக்கும், வேறுசிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

2011 ஜூன் 13-ம் தேதி இரவு ஒரு கும்பல் கிருஷ்ணவேணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யவலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுதொடர்பாக தாழையூத்து போலீஸார் விசாரணை நடத்தி, தாழையூத்து ஊராட்சியின் அப்போதைய கவுன்சிலர் சுப்பிரமணியன் (60), அவரது நண்பர் சுல்தான் மைதீன் (59), ஜேக்கப் (33), கார்த்திக் (34), பிரவீன் ராஜ் (32), விஜயராமமூர்த்தி (34), ராமகிருஷ்ணன், சந்தனமாரி, நடராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.

நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்தவழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சுமத்தப்பட்ட சுப்பிரமணியன் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 8-ம் தேதி தெரிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

2 பேர் வழக்கிலிருந்து விடுவிப்பு: குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், ஜேக்கப், கார்த்திக், பிரவீன் ராஜ், விஜயராமமூர்த்தி ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் பிரவீன் ராஜுக்கு ரூ.1.10 லட்சம், மற்ற 5 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நடராஜ் என்பவர் உயிரிழந்துவிட்டார். ராமகிருஷ்ணன், சந்தனமாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x