

சென்னை: இன்ஸ்ட்ராகிராம் மூலம் அறிமுகமான ஆண் நண்பரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம் குறித்து ராஜமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு, கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் சுமுகமாக பிரிந்தனர். கணவன், மனைவி இருவரிடமும் தலா ஒரு குழந்தை வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஜெயக்குமார் என்ற பெயர் கொண்டவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
முதலில் நண்பராக பழகி வந்தவர், பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்தாராம். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி காலை 9 மணிக்கு ஜெயக்குமாரை சந்திக்க ரெட்டேரி சந்திப்புக்கு அந்த பெண் சென்றுள்ளார்.
அங்கு ஜெயக்குமார், மாதுளை பழச்சாறு வாங்கிக் கொடுத்து அருகில் உள்ள லாட்ஜில் இருக்கும் தனது நண்பரை பார்த்துவிட்டு வரலாம் என அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது ஜெயக்குமாரின் நண்பர் அங்கு இருந்துள்ளார். சிறிது நேரத்தில் பெண் மயங்கியுள்ளார்.
மாலை 4.30 மணிக்கு ஜெயக்குமார் அப்பெண்ணை எழுப்பி இருசக்கர வாகனத்தில் மீண்டும் அழைத்து ரெட்டேரி சந்திப்பில் இறக்கிவிட்டு அங்கிருந்து மணலி செல்லும் ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். வீடு திரும்பியபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையும் மாயமாகி உள்ளது.
அதிர்ச்சி அடைந்த அப்பெண் இதுகுறித்து ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்தபோது, ‘என்னை ஜெயக்குமார் எழுப்பியபோது, தான் அரை மயக்கத்தில் இருந்ததாகவும், ஆடைகள் அனைத்தும் கலைந்துஇருந்ததாகவும், பிறகு ஜெயக்குமார் என்னை இருசக்கர வாகனத்தில் அவசர அவசரமாக ஏற்றிச்சென்று ரெட்டேரி சந்திப்பில் இறக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து மணலி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனரா? என்ற கோணத்திலும், மணலி பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் ஜெயக் குமார் என்ற பெயரில் பழகியவரின் பெயர் உண்மையிலேயே ஜெயக்குமார்தானா? எந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வரு கின்றனர்.