

சென்னை: தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தவிவகாரத்தில் மேலும் ஒருவரை என்ஐஏகைது செய்துள்ளது. தற்போது கைதுசெய்யப்பட்டவர் காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க பாகிஸ்தானிடம் உதவி கேட்க ஆலோசித்ததாக பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் யூ-டியூப் சேனல் ஒன்றில், இருந்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம்போலீஸார் கண்டறிந்து துப்பு துலக்கினர். இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முன்னாள் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூ-டியூப்சேனல் நடத்தி வந்ததும், அதில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும் தெரியவந்தது. ஹமீது உசேன், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) மாற்றப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிந்து ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துவிசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர்கள் தொடர்புடைய சென்னை, தாம்பரம், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி செல்போன், சிம்கார்டு, பென்டிரைவ், லேப்டாப் உட்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட 6 பேரையும் தங்கள் காவலில்எடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நிதி உதவி செய்தவர்கள், வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 7-வது நபராக சென்னை தரமணியைச் சேர்ந்தவ ஃபைசல் உசேன் (36) என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்தின் சென்னை - புதுச்சேரிக்கு உட்பட்ட பகுதிக்கு முக்கிய நிர்வாகியாக செயல்பட்டுள்ளார். மேலும் அவர்,இந்தியாவுக்கு எதிரான சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிக்க பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ உதவியை நாட வேண்டும் என்றும் பேசி வந்துள்ளார். சக கூட்டாளிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்திய அரசை கவிழ்க்க சதி: மேலும், ஜிஹாத் மூலம் இந்திய அரசைக் கவிழ்த்து கிலாபத் இயக்ககொள்கையுடைய அரசை நிறுவவேண்டும் என்ற நோக்கத்துடன், அதற்காக தேர்தலுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிரசாரத்தில் ஃபைசல் உசேன் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.