

திருச்சி: திருச்சியில் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்த லாரி புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நூலிழையில் உயிர் தப்பினார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (40). லாரி ஓட்டுநரான இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிமென்ட் நிறுவனத்தில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு கோவை சென்றார். கோவையில் சிமென்ட் லோடு இறக்கிவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டார். இன்று காலை சுமார் 7.45 மணி அளவில் திருச்சி கரூர் பைபாஸ் சாலை குடமுருட்டி பாலத்தை கடந்து லாரி வந்தது.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் உள்ள புறக்காவல் நிலையத்துக்குள்ளே புகுந்தது. இதில் சோதனை சாவடியில் முன் இருந்த அறிவிப்பு பலகைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். ஆயினும் அவர் எந்தவித சேதம் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார்.
அப்பகுதியில் இருந்த மக்கள் நாகராஜை மீட்டனர். இந்த விபத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்து, ஓட்டுநர் சுகுமாரனைப் பிடித்து விசாரித்தனர். போலீஸார் விசாரணையில் சுகுமாரன் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வின்றி பணியாற்றி வருவதாகவும், மன உளைச்சலுடன் இருந்ததும் தெரியவந்தது. மேலும் சரியான தூக்கமின்மை காரணத்தால் கண் அயர்ந்து விட்டதே விபத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.