உடுமலை அருகே கார் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உடுமலை அருகே கார் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
Updated on
1 min read

உடுமலை: மடத்துக்குளம் அருகே இன்று (அக்.9) அதிகாலை கார் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி இந்திரா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (45). பழைய கார் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் தனது பொலிரோ காரில் சென்றுள்ளார். பின்னர் இன்று (அக்.09) அதிகாலை பழநியை நோக்கி காரில் கிளம்பினர். கார் மடத்துக்குளம் கருப்புசாமி புதூர் புதிய பைபாஸ் சாலை வழியாக சென்றது. அப்போது எதிரே பழநியில் சாமி தரிசனம் செய்து விட்டு கேரளா நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வேன் வந்தது.அதில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 23 பேர் பயணம் செய்தனர்.

சாலைப் பணிகள் முடிவுறாத நிலையில் இரு வாகனங்களும் ஒரு வழிப் பாதையில் சென்ற நிலையில் திடீரென்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. காரில் பயணம் செய்த தியாகராஜன் (45). அவரது மனைவி ப்ரீத்தி (40). மகன் ஜெய் பிரியன் (11). ஆகியோர் 3 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாயார் மனோன்மணி (65) உடுமலை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேனில் பயணம் செய்தவர்களில் 12 பேர் லேசான காயம் ஏற்பட்டது. உடுமலை அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிக்சைக்கு பின் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மடத்துக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நடைபெறும் புதிய பைபாஸ் சாலை பணி முடிவுறாத நிலையில் அனுமதிக்கப்படும் வாகனங்களால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருவது தொடர் நிகழ்வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in