புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று (அக்.8) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாயிற் கதவுகளை மூடி நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்க வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா. சைதன்யா தலைமையில் இரண்டு மோப்ப நாய்களுடன் போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவர்கள், அங்கிருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜிப்மர் வளாகத்தில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, நிர்வாக அலுவலகம், புற்றுநோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை என பல்வேறு பிரிவுகள் அமைந்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் மோப்ப நாய்கள் உதவிகளுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஜிப்மர் வளாகத்தில் தங்கி இருந்த அனைத்து நோயாளிகளின் உறவினர்களும் அதிரடியாகவும் வெளியேற்றப்பட்டனர்.

வெளியில் இருந்து மருத்துவமனைக்குள் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு சோதனையால் வாயிற் கதவுகள் மூடப்பட்டுள்ளதால் கதவுக்கு வெளியே ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in