

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கடந்த 5ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று (அக்.8) அதிகாலையில் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உதகையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனையில், பள்ளி வளாகத்தில் வெடிகுண்டுகள் எதுவும் வைக்கவில்லை எனத் தெரியவந்தது. ஆனாலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.