

புதுச்சேரி:பிரபல தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாகக் கூறி, புதுச்சேரியைச் சார்ந்த 132 நபர்களிடம் கடந்த ஐந்து மாதத்தில் ரூ.1 கோடியே 82 லட்சம் மோசடி நடந்துள்ளது.
புதுச்சேரியில் இணைய வழி குற்றங்கள், மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இணைய திருடர்கள் பொதுமக்களை நவீன முறையில் ஏமாற்றுவதாக புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறியதாவது; புதுச்சேரியில் உள்ள பிரபல வங்கிகள், நிதி நிறுவனங்களின் மேலாளர் பேசுவதாகச் சொல்லி குறைந்த வட்டியில் உங்களுக்கு கடன் வாங்கி தருகிறோம் என்று நம்பவைத்து கடந்த ஆறு மாதங்களாக பலரிடம் மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, ஜாமீன்தாரர்கள் யாரும் தேவையில்லை, உங்களுடைய வங்கி பரிவர்த்தனையை வைத்து உங்களுக்கு கடன் கொடுப்போம். எனச் சொல்லி, இன்சூரன்ஸ் ப்ராசசிங் ஃபீஸ் என ஒவ்வொரு நபரிடமும் அவர்களுடைய அவசரத்தைப் புரிந்து கொண்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.16 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.
இப்படி புதுச்சேரியைச் சேர்ந்த 132 நபர்களிடம் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ரூ. 1.82 கோடி இணைய வழி மோசடிக்காரர்களால் திருடப்பட்டுள்ளது. குறைந்த வட்டிக்கு பணம், ஜாமீன் தேவை இல்லை என்று சொல்லி பிரபல வங்கிகள், நிதி நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இந்தக் கும்பலிடம் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.