

ராய்ப்பூர்: வங்கிப் பரிவர்த்தனையில் மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மோசடி என பல்வேறு நிதி மோசடிகள் நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஒரு கும்பல் வங்கிக் கிளையையே போலியாக நடத்திய துணிகர சம்பவம்சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) போலி கிளையை அமைத்து இவர்கள் மக்களை ஏமாற்றியதுடன் சட்டவிரோத நியமனங்கள், போலி பயிற்சி வகுப்புகள் என வேலைவாயப்பற்ற இளைஞர்களையும் மோசடி செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 250கி.மீ. தொலைவில் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது சோப்ரா கிராமம். இங்கு நாட்டின் மிகப் பெரும் வங்கியான எஸ்பிஐ-யின்அசல் கிளையை போன்றே கவுன்ட்டர்கள், பர்னிச்சர் என போலிகிளை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்திற்கிடமின்றி 6 ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது மோசடி என்று தெரியாத கிராம மக்களும் வங்கியில் புதிய கணக்குகள் தொடங்கி, பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் அருகில் தப்ராவில் செயல்பட்டு வந்த எஸ்பிஐ கிளையின் மேலாளர், புதியகிளை பற்றி சந்தேகம் அடைந்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கடந்த 27-ம்தேதி எஸ்பிஐ அதிகாரிகளுடன் இந்த கிளைையை போலீஸார் முற்றுகையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அங்கு கடந்த 10நாட்களாக போலி வங்கிக் கிளைசெயல்பட்டு வருவதும், போலி ஆவணங்கள் மூலம் பலர் வேலைக்கு நியமிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ராஜேஷ் படேல் கூறும்போது, “இந்த மோசடியில் ரேகாசாகு, மந்திர் தாஸ், கிளை மேலாளர் போல் செயல்பட்ட பங்கஜ் உள்ளிட்ட 4 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த போலி கிளையில் ஆட்களை நியமித்துள்ளனர்.மேலும் கிராம மக்களையும் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது’’ என்றார்.