

சென்னை: மும்பை போலீஸ் என மிரட்டி வெளிநாட்டு கும்பல் கோடிக்கணக்கில் பணம் பறிப்பதாகவும், அவர்களுக்கு முகவர்களாக செயல்பட சென்னை இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாகவும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
செல்போன் அழைப்பு: சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் 72 வயதுடைய ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் என்னுடைய செல்போன் இணைப்பு 2 மணி நேரத்தில் துண்டிக்கப்படும் என்றும், மேலும் தகவலுக்கு எண் 9-ஐ அழுத்துமாறும் பதிவு செய்யப்பட்ட குரலில் சொல்லப்பட்டது.என்னுடைய செல்போன் எண், ஆதார், வங்கி கணக்கு, கியாஸ் சிலிண்டர் இணைப்பு, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த எண் துண்டிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் எண் 9-ஐ அழுத்தினேன்.
மும்பை போலீஸ்: அந்த போன் அழைப்பில் பேசிய மோசடி நபர், உங்கள் போன் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, ஹவாலா (சட்ட விரோத பணம்) பணபரிவர்த்தனை நடந்துள்ளதால், உங்கள் மீது மும்பை மற்றும் டெல்லி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறி உங்கள் போன் காலை மும்பை போலீசுக்கு இணைக்கிறோம் என்று கூறினார். இணைப்பில் வந்த மும்பை போலீஸார், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் பல வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு. பெடெக்ஸ் கொரியர் மூலம் சட்டவிரோதமான போதைப் பொருட்கள், போலி பாஸ்போர்ட், 257 ஏடிஎம் கார்டு, புலித்தோல் ஆகியவை அடங்கிய பார்சல் ஒன்று சுங்கதுறையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணைக்கு இரண்டு மணி நேரத்தில் மும்பை சைபர் க்ரைம் காவல் நிலையத்துக்கு வரவேண்டும். இல்லையெனில் உங்களை கைது செய்வோம் என மிரட்டினர்.
பண மோசடி: மேலும், நீங்கள் குற்றமற்றவர் என நிரூபிக்க உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆர்பிஐ வங்கி கணக்குக்கு அனுப்பவும். 30 நிமிடங்களில் வங்கிக் கணக்கை சரிபார்த்து உங்கள் பணம் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று நம்பவைத்து ரூ.4.67 கோடியை மோசடியாளர்கள் ஏமாற்றிவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
13 பேர் கொண்ட கும்பல் கைது: இதுகுறித்து, துணை ஆணையர் ஜெரினாபேகம், உதவி ஆணையர் பால் ஸ்டீபன் தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்தனர். இதில், வெளிநாட்டு கும்பலுக்கு சென்னை வில்லிவாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் முகவர்கள் இருந்ததும், இவர்கள் கணக்குக்கு மோசடி பணம் அனுப்பப்பட்டு அவர்கள் அந்தப் பணத்தை ஹவாலா பணமாக வெளிநாட்டு மோசடிக் கும்பலுக்கு அனுப்பி அதற்காக கமிஷன் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, முகவராக செயல்பட்ட கல்லூரி மாணவர் உட்பட 13 பேர் கொண்ட கும்பலை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள மோசடிக்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இளைஞர்களுக்கு குறி... இந் நிலையில், மும்பை போலீஸ் என மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் வெளிநாட்டு கும்பல், தாங்கள் மிரட்டி பணம் பறிக்கும்போது, அந்த பணத்தை அவர்கள் கணக்கில் நேரடியாக வரவு வைத்தால் போலீஸாரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதால் வெவ்வேறு கணக்குகளில் பணத்தைப் பெற்று அதை பின்பு தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்கின்றனர். இப்படி இடைத்தரகராகவும் முகவர்களாகவும் செயல்பட இந்தியாவைச் சேர்ந்த நபர்களை வெளிநாட்டுக் கும்பல் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அதாவது சென்னையில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை இந்த வெளிநாட்டு மோசடி கும்பல் அதிக பணம் தருவதாக மூளைச் சலவை செய்து அவர்களை தங்களுக்காக வேலை செய்வதற்குத் தூண்டுகின்றனர்.
காவல்துறை எச்சரிக்கை: இதன் அடிப்படையிலேயே மோசடி பணம் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டு பின்பு வெவ்வேறு கணக்குகளாக கைமாறி இறுதியாக வெளிநாட்டு மோசடி கும்பல்களின் கைகளுக்கு செல்கின்றது. இதைத் தெரிந்து கொள்ளாமல் கமிஷனாக அதிக பணம் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோசடி பணத்தை தங்கள் கணக்குக்கு வரவு வைக்க சம்மதம் தெரிவிக்கின்றனர். இது சட்டப்படி தவறு. இப்படிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே இதுபோன்ற வெளிநாட்டு மோசடி கும்பலின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் உஷாராக இருக்க வேண்டுமென சைபர் க்ரைம் போலீசாரும் அறிவுரை வழங்கி உள்ளனர்.