

நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளின் மீது ஏறி பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்குமாறு, டிஜிபி சங்கர் ஜிவாலிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் மனு அளித்தனர்.
ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில் வடமாநிலக் கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை பாராட்டுவதற்காக டிஜிபி சங்கர்ஜிவால், நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்தார். அவரிடம் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள்மனு அளித்தனர். பின்னர், சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குறிப்பிட்ட இடத்தில் லாரியைநிறுத்தினால், அதன் எண்களைகாவல் துறையினர் புகைப்படம்எடுத்து, குற்ற வழக்கு பதிவு செய்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்தினால், டீசல் திருடப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு லாரிகள் செல்லும்போது, லாரிகளின் மீது ஏறி, சரக்குகளைத் திருடுகின்றனர். குறிப்பாக, மருந்துப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் திருடப்படுகின்றன.
அரவக்குறிச்சி மற்றும் சேலம்மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், நாமக்கல் ஆகியஇடங்களில் லாரிகள் செல்லும்போது, சரக்குகள் திருடப்படுகின்றன. இவற்றைத் தடுக்க நெடுஞ்சாலை ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும். லாரிகளில் சரக்கு திருடப்பட்டது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளித்தால், வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழிக்கின்றனர்.
எனவே, திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் வழக்குகளைத் தவிர்க்கவேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிஜிபியிடம் மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார். சம்மேளன துணைத் தலைவர் சின்னுசாமி, பொருளாளர் தாமோதரன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள் உடனிருந்தனர்.