

சென்னை: சென்னை கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகளை திருடியதாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர் அதே பகுதியில் கிளி உள்ளிட்ட (வீட்டில் வளர்க்கும்) பறவைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பிற்பகல் கிளி வாங்குவது போல் வந்து பேச்சுக்கொடுத்த மூன்று நபர்கள் திடீரென "Larry red" வகை கிளிகள் மூன்றை கூண்டோடு தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். இது ஒரு கிளியின் விலை 35 ஆயிரம் ரூபாய். இது தொடர்பாக அரவிந்த் ரமேஷ் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் கிளி திருட்டில் ஈடுபட்டதாக அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே நின்றிருந்த பாடியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (30), விஜய் (28), கொரட்டூரைச் சேர்ந்த கலைச்செல்வன் (31) ஆகிய மூவரை ராஜமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று கிளிகளையும், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.