

சென்னை: சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் இன்றும் (அக்.1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டல் ஆசாமிகளை கண்டுபிடித்து கைது செய்ய முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.
சமீப காலமாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. மிரட்டல் விடுக்கப்படும் போதெல்லாம் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனை நடத்துவதும் தொடர் கதையாகிறது.
மிரட்டல் விடுப்பது ஒரே கும்பல்தான் என்றும், அதுவும் வெளிநாட்டில் இருந்துதான் இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது. அக்கும்பலை கைது செய்ய மத்திய போலீஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடுத்தடுத்து இன்று (அக்.1) இரண்டு 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் சேர்த்து இதுவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 14 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த மேலும் 2 பள்ளிகளுக்கும் இன்று மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. தொடரும் இதுபொன்ற மிரட்டல்களை தடுக்க முடியாமலும், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமலும் போலீஸார் தவித்து வருகின்றனர்.