

ஆவடி: அம்பத்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இன்று (செப்.29) போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் அணுகு சாலையை ஒட்டிவுள்ள மைதானத்தில் உள்ள முட்புதரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்பத்தூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில், மைதானத்தில் உள்ள முள்புதரில் அரை டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆகவே, அந்த புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் பகுதியை சேர்ந்த கண்ணன் (51), பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து, அம்பத்தூர் பகுதியில் பதுக்கி வைத்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
அந்த வகையில், மைதானத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கண்ணன் பதுக்கி வைத்துள்ளார். இவர் மீது கூடுவாஞ்சேரி, கவரப்பட்டை, குன்றத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், இன்று கண்ணனை கைது செய்தனர்.