சென்னையில் கன்டெய்னருடன் ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு: தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநர் கைது

சென்னையில் கன்டெய்னருடன் ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு: தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநர் கைது
Updated on
1 min read

சென்னை: ரூ.35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மேலாளரான குரோம்பேட்டை, சரஸ்வதிபுரத்தைச் சேர்ந்த பொன் இசக்கியப்பன் (46) என்பவர் துறைமுகம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், 'கடந்த 7ம் தேதி வெளிநாட்டிலிருந்து சுமார் ரூ.35 கோடி மதிப்புள்ள 5,230 டெல் நோட்புக் கம்ப்யூட்டர்கள் (Tab) அடங்கிய கன்டெய்னரை சென்னை துறைமுகத்தில் உள்ள யார்டில் இறக்கி வைத்தோம். மீண்டும் 11ம் தேதி அந்த கன்டெய்னரை எடுப்பதற்காக துறைமுகத்திற்கு வந்து பார்த்தபோது, அதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதில், தொடர்புடையவர்களை கைது செய்து அதில், இருந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும்' என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மேலாளர் பொன் இசக்கியப்பன் பணி செய்து வரும் நிறுவனத்தில் பணி செய்து வரும் இளவரசன் என்பவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கன்டெய்னரை திருடி திருவள்ளூர் மணவாளன் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த எலட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய கண்டெய்னரை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக திண்டுக்கல் நிலக்கோட்டை முத்துராஜ் (46), திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் ராஜேஷ் (39), அதே பகுதி நெப்போலியன் (46), சிவபாலன் (44), திருவள்ளூர் பால்ராஜ் (31), அதே பகுதி மணிகண்டன் (31) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து கடந்த வாரம் சிறையில் அடைத்தனர். இளவரசன் உட்பட 3 பேரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இடைத்தரகராக செயல்பட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் சங்கரன் (56) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம், விசாரணை செய்ததில், இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட முத்துராஜ் தன்னிடம் துறைமுகத்திலிருந்து சில பொருட்களை கடத்த வேண்டி இருப்பதால் எங்களுக்கு 40 அடி கண்டெய்னர் ஏற்பாடு செய்து கொடுத்தால் தனக்கு 5 லட்சம் தருவதாக கூறினார். தானும் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏற்பாடு செய்து கொடுத்ததாக சங்கரன் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in