உ.பி.யில் பள்ளியின் வளர்ச்சிக்காக 2-ம் வகுப்பு மாணவன் நரபலி

உ.பி.யில் பள்ளியின் வளர்ச்சிக்காக 2-ம் வகுப்பு மாணவன் நரபலி
Updated on
1 min read

ஹாத்ரஸ்: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் அண்மையில் பள்ளி விடுதியில் 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. பள்ளிவளர்ச்சிக்காக சிறுவன் நரபலிகொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டம், ரஸ்காவனில் 'டி.எல். பப்ளிக் ஸ்கூல்' என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் கிரிதார்த் என்ற சிறுவன், பள்ளிவிடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சிறுவனின் தந்தை கிரிஷன் குஷ்வாகாவை பள்ளி நிர்வாகத்தினர் தொலைபேசியில் அழைத்து,கிரிதார்த் நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த குஷ்வாகா பள்ளிக்கு சென்றபோது, சிறுவனை பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகெல் தனது காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து தினேஷ் பாகெல் காரில் இருந்து சிறுவனை சடலமாக மீட்ட குஷ்வாகா இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் பள்ளிவளர்ச்சியும் புகழும் பெறுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்துள்ளது.

5 பேர் கைது: இதுகுறித்து போலீஸார் நேற்று கூறியதாவது: இந்த வழக்கில் பள்ளி உரிமையாளர் ஜசோதன் சிங், அவரது மகனும் பள்ளி இயக்குநருமான தினேஷ் பாகெல் மற்றும் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி உரிமையாளர் ஜசோதன் சிங்கிற்கு பில்லி சூனியம் மீதுநம்பிக்கை உள்ளது. இதை அகற்றுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளிக்கு பின்புறம் பூஜை நடத்தியுள்ளார்.

இதையடுத்து சிறுவனை நரபலி கொடுக்க முடிவு செய்த அவர், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை தூக்கிவரச் செய்துள்ளார். இந்நிலையில் தூக்கத்தில் இருந்து விழித்த கிரிதார்த் பயத்தில் அலறியதால் அவனை கழுத்தை நெரித்துகொன்று விட்டனர். பிறகு சிறுவன் உடல்நலக் குறைவால் இறந்ததுபோல் நாடகமாடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பள்ளிக்கு பின்புறம் பூஜை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன் கடந்த 6-ம் தேதி மற்றொரு சிறுவனை நரபலி கொடுக்க பள்ளி உரிமையாளர் முயன்றுள்ளார். ஆனால் அம் முயற்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறு போலீஸார் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in