

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுவன் காணாமல் போனதாக தாயார் புகார் தந்தவுடன், போலீஸார் ஒருங்கிணைந்து அந்தச் சிறுவனை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வள்ளி. இவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரின் மகன் விக்ராந்த் (10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 6.30 மணியளவில் விக்ராந்த் தூங்கி எழுந்தார். அப்போது அவரின் தாயார் வள்ளி குளித்துவிட்டு வரும்படி கூறியுள்ளார். அதன்படி, குளித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற விக்ராந்த் திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து, வள்ளி தனது மகனை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். எங்கும் கிடைக்கவில்லை என்றதும் காலை 9 மணிக்கு தனது மகன் காணாமல் போனது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் வள்ளி புகாரளித்துள்ளார். ஏற்கெனவே இதே முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி மாயமாகி பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமி மாயமானவுடன் போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை உயிருடன் மீட்டிருக்கலாம் என பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் அப்போது குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், சிறுவன் காணமால் போனதாக புகார் வந்ததுமே முத்தியால்பேட்டை போலீஸார் பதற்றமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் சிறுவனைக் கண்டுபிடிக்க பெரியகடை போலீஸாரின் உதவியையும் நாடினர். சிறுவன் விக்ராந்தின் போட்டோவை மற்ற காவல் நிலையங்களுக்கும் அனுப்பி சிறுவனை தேடினர். நகர பகுதி முழுவதும் ஜீப், மோட்டார் சைக்கிளில் சிறுவனை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
காவலர் ராஜேஷ், பாலமுருகன் ஆகியோர் கடற்கரை சாலை, அதன் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். அப்போது பாரதி பூங்காவில், இருக்கையில் விக்ராந்த் தூங்கிக் கொண்டிருந்ததை அவர்கள் பார்த்துள்ளனர். அவரை எழுப்பி விசாரித்தபோது, "வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த என்னை யாரோ கடத்திவந்து இங்கு விட்டு விட்டனர்" என்ச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து விக்ராந்தை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, “எனக்கு கடற்கரை, பூங்கா செல்ல வேண்டும் என ஆசையாக இருந்தது. அம்மா திட்டுவார் என்பதால் கேட்க பயமாக இருந்தது. அதனால் நானே வந்தேன்" என சிறுவன் விக்ராந்த் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவன் விக்ராந்துக்கு போலீஸார் அறிவுரை கூறி அவரது தாயிடம் அவரை ஒப்படைத்தனர்.