

திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள உடப்பன்குளம் கிராமத்தில் இறந்தவர் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச் செல்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்தது. 2014 மே 31-ம் தேதி இரவில் உடப்பன்குளத்தை சேர்ந்த காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர், அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ் (எ) பரமசிவன், குருசாமி, கண்ணன், முத்துசாமி, காளிராஜ் (எ) தங்கராஜ், வி.கண்ணன், முருகன் (எ) பாலமுருகன், முத்துகிருஷ்ணன், மற்றொரு கண்ணன், சுரேஷ் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர்உயிரிழந்தனர்.
இந்நிலையில், பொன்னுமணி உள்ளிட்ட 11 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி சுரேஷ்குமார் கடந்த 24-ம் தேதி தீர்ப்பு கூறினார். குற்றம் நிருபிக்கப்படாததால் மற்ற 11 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 11 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் செப். 26-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொன்னுமணி, சுரேஷ், உலக்கன் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி அறிவுறுத்தியதையடுத்து, மீதமுள்ள 8 பேரும் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, பொன்னுமணி, காளிராஜ், குருசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு 3 பேரை கொலை செய்த குற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் பதிவு செய்த வழக்குஆகியவற்றுக்காக தூக்கு தண்டனையும், குட்டிராஜ், கண்ணன், உலக்கன், மற்றொரு கண்ணன், முருகன் ஆகியோருக்கு 5 ஆயுள் தண்டனையும், வே.கண்ணன், சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.