

சென்னை: கோயில்களில் திருடி, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான 3 ஐம்பொன் சிலைகள் போலீஸாரின் வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய போலீஸார் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் கடந்த 24-ம் தேதி அதே பகுதியில் உள்ள மதினா பள்ளிவாசல் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீஸாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வேறு திசை நோக்கிச் செல்ல முயன்றனர்.
போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னால், அமர்ந்திருந்தவர் பிடிபட வாகனத்தை ஓட்டிய நபர் இருசக்கர வாகனத்துடன் தப்பினார். இதையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவர் ஆவடியைச் சேர்ந்த இர்ஷித் அகமது (48) என்பது தெரியவந்தது.
அவர் கையில் வைத்திருந்த சாக்குப் பையை சோதித்தபோது, அதற்குள் பழமையான ஐம்பொன் சிலைகளான சுமார் 1.5 அடி உயரமுள்ள முருகன் சிலை, ஓர் அடி உயரமுள்ள வள்ளி சிலை, தெய்வானை சிலை என 3 சிலைகள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த சிலைகள் வெவ்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்டு, விற்பனை செய்ய முயற்சி நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இர்ஷித் அகமதுவின் கூட்டாளிகள் ரவுடியான டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் எபினேசர் (27), இருசக்கர வாகனத்திலிருந்து தப்பிய மூர் மார்கெட்டில் கடை வைத்திருக்கும் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜேஷ் (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் சிலைகளை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இதுகுறித்து தொல்லியல் துறை நிபுணர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலைகள் எனவும், ஏதேனும் கோயில்களிலிருந்து எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கு விரைவில் தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தக் கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறது.கோயில்களில் திருடி, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான 3 ஐம்பொன் சிலைகள் போலீஸாரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.