

சென்னை: பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலை என விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த, பிரபல ரவுடி செல்போன் மூலம் குட்டு வெளியானது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆகாஷ். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி டி.பி.சத்திரத்தில் பெண் காவல் ஆய்வாளரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி ரோகித் ராஜின் நெருங்கிய கூட்டாளி.
டி.பி.சத்திரத்தை சேர்ந்த இவர்களின் எதிர்தரப்பைச் சேர்ந்த மற்றொரு ரவுடியை கொலை செய்துவிட்டால் அதன்பிறகு “ஏரியாவில் நம்ம டீம் தான் கெத்து. சென்னையின் அண்ணா நகர், அமைந்தகரை, செனாய் நகர் அரும்பாக்கம் ஆகிய ஏரியாக்கள் நமது கண்ட்ரோல் தான்” என ஆகாஷ் பேசிய ஆடியோ பதிவு ஒன்று போலீஸாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து டி.பி. சத்திரம் போலீஸார் ஆகாஷை கைது செய்தனர்.
அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பழங்கால சிலைகள் தொடர்பான போட்டோக்கள் இருந்துள்ளது. இதுகுறித்து ஆகாஷிடம் நடத்திய விசாரணையில் பழமையான பொருட்கள் கிடைக்கும் இடமான மூர் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் நண்பர் ராஜேஷிடமிருந்து கடந்த 2020-ல் கரோனா முதல் அலையின் போது அந்தச் சிலைகளை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள சிற்பக் கலைக்கூடத்திற்கும் போலீஸாரை அழைத்துச் சென்று காண்பித்துள்ளார் ஆகாஷ். ஆனால், அந்த மூன்று சிலைகளும் பித்தளை சிலைகள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலைகளின் கிரீடத்தில் மட்டும் ஐம்பொன் போல சில உலோக கலவைகளை ஒட்டி தில்லு முல்லு வேலையில் ஆகாஷ் ஈடுபட்டுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பழமையான பொருட்கள் வாங்குபவர்கள் யாராவது சிக்கினால் அவர்களிடம், ஐம்பொன் சிலைகள் எனக்கூறி இவற்றை பல கோடி ரூபாய்க்கு விற்றுவிடலாம் என ஆகாஷ் மூர்மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அவரது நண்பர் ராஜேஷ் மற்றும் இர்ஷத் ஆகியோர் திட்டம் போட்டுள்ளனர். இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலரையும் தொடர்பு கொண்டு இந்தச் சிலைகளை விற்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், இந்தச் சிலைகள் பித்தளை சிலை என தெரியவந்ததால் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே மணலி பகுதியில் தனக்குத் தெரிந்த ஓர் இடத்தில் இந்தச் சிலைகளை ஆகாஷ் பதுக்கி வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.