சிங்கப்பெருமாள் கோவில் அருகே கார் மோதி பைக்கில் வந்த டாஸ்மாக் ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
மறைமலைநகர்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகேயுள்ள கவசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் பூந்தமல்லியில் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தார். பூந்தமல்லி பரணிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர்கள் இருவரும் இன்று (செப்.24) காலை 10 மணியளவில் ஒரே பைக்கில் செங்கல்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த மகேந்திரா சிட்டி அருகே செல்லும் போது திடீரென பின்னால் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த பவித்ரன் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
