

சென்னை: சென்னையில் 6 கொலை உட்பட 39 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் பார் உரிமையாளர் ஆனந்தன் என்பவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் துப்பாக்கி முனையில் பணம் பறித்துவிட்டு ரவுடி சீசிங் ராஜா என்ற ராஜா (52) தப்பினார். ஏ பிளஸ் ரவுடியான இவர் சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர். இவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் வேறொரு வழக்குவிசாரணைக்காக தனிப்படை போலீஸார் ஆந்திராவில் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு ரேணிகுண்டா - கடப்பா நெடுஞ்சாலை அருகே ராஜம்பேட்டை பகுதியில் வேளச்சேரி போலீஸாரால் தேடப்பட்டு வரும் சீசிங் ராஜா பதுங்கி இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவரை பிடித்து, நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமலிடம் ஒப்படைத்தனர். சீசிங் ராஜாவை கைது செய்தபோலீஸார் அவரிடம் விசாரணைநடத்தினர். இதில், சென்னை கிழக்குகடற்கரை சாலை அக்கரை இஸ்கான் கோயில் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில் தனது கள்ளத் துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக சீசிங் ராஜா தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை ஆய்வாளர் விமல், காவல்வாகனத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அப்பகுதிக்கு அழைத்து சென்றார். அவருடன் அடையாறு ஆய்வாளர் இளங்கனி மற்றும் 3 போலீஸாரும் சென்றுள்ளனர்.
அங்கு துப்பாக்கி மறைத்து வைத்த இடத்தை சரியாக காட்டாமல் போலீஸாரை சீசிங் ராஜா அலைக்கழித்துள்ளார். பின்னர், திடீரென புதருக்குள் பாய்ந்து, அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து ஆய்வாளர் இளங்கனியை நோக்கி சுட்டுள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் தப்பினார். தொடர்ந்து வெளியேறிய குண்டுகள், காவல் வாகனத்தில் 2 இடங்களை துளைத்தன. இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக ஆய்வாளர் இளங்கனி தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில், சீசிங் ராஜாவின் இடது மார்பில் குண்டு பாய்ந்து, அங்கேயே சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, நீலாங்கரை காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சீசிங் ராஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பப்பட்டது. சென்னை காவல் ஆணையராக அருண் பதவி ஏற்ற பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி திருவேங்கடம் மற்றும் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி தற்போது சீசிங் ராஜா என இரண்டரை மாதத்தில் அடுத்தடுத்தடுத்து 3 ரவுடிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் மற்றும் காக்கா தோப்பு பாலாஜிஆகிய இருவரையும் என்கவுன்ட்டர் செய்தது காவல் ஆய்வாளர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
சீசிங் ராஜாவின் குற்ற பின்னணி: சிட்லபாக்கம் காவல் நிலைய ஏ பிளஸ் ரவுடியான சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் உள்ளன. 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு 4 மனைவிகள். தவணை கட்டாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் (‘சீசிங்’) செய்வதில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு சீசிங் ராஜா என்ற பெயர் வந்துள்ளது.
கள்ளச்சாராய தொழில் போட்டியில் ராமு என்பவருடன் சேர்ந்து 2006-ல் ரமணி என்பவரை சீசிங் ராஜா கொலை செய்தார். 2008-ல் தனது நண்பன் ராமுவை கொன்ற ரமணியின் கூட்டாளியான நட்ராஜை கொன்று பழிதீர்த்தார். 2009-ல் தனது கூட்டாளி சிவலிங்கத்தை கொலை செய்த விஜி என்பவரை கொன்றார்.
மேலும் 2010-ல் ரவுடி ஆற்காடுசுரேஷின் 2-வது மனைவியான அஞ்சலையை ரவுடி சின்ன கேசவலுமிரட்டியதால் பூந்தமல்லி நீதிமன்றம் அருகில் அவரையும், அவரது வழக்கறிஞர் பகத்சிங்கையும் தனது கூட்டாளியுடன் சேர்ந்து சீசிங் ராஜா கொன்றார். 2015-ல்சீசிங் ராஜா கூட்டாளியான அம்பேத்குமாரிடம் பிரச்சினை செய்ததாக பாம் சரவணனின் சகோதரர் தென்னரசுவை கொலை செய்தார்.
முன்னரே எச்சரித்த மனைவி: சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்படுவதற்கு முந்தைய நாளானநேற்று முன்தினம் இரவு அவரது மனைவிகளில் ஒருவரான வினித்ரா,போலீஸார் தனது கணவரை என்கவுன்ட்டர் செய்ய உள்ளதாகவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும்என்றும் தனது குழந்தையுடன் உருக்கமான வீடியோ ஒன்றைவெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பதில் அளித்த இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி, குற்றவாளிகளை கைது செய்தால் அவர்களது உறவினர்கள் இதுபோல செய்வது வாடிக்கையாகிவிட்டது என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பில்லை: தென்சென்னை காவல் இணை ஆணையர் சிபி சக்ரவரத்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘போலீஸார் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்துள்ளார். அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கு தொடர்பு இல்லை. சட்டப்படி தண்டனை தரவேண்டும் என்றுதான் பிடிக்க வந்தோம். எதிர்பாராதவிதமாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது’’ என்றார்.