

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் மதுவிலக்கு காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போலியாகவும் மற்றும் அலுவலக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி, சாராய வியாபாரியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க முயன்ற, தலைமை காவலர் உள்பட இரண்டு போலீஸாரை மாவட்ட எஸ்பி.சாய்பிரணீத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பகுதியில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. இதில், தற்போது மங்களப்பிரியா ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடப்பாக்கம் அருகே உள்ள சேம்புலிபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ததாக குருசாமி என்பவரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட குருசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் சுமார் 6.30 லட்சம் இருந்துள்ளது.
இதனால், தனது வங்கி கணக்கை எவ்வாறு விடுவிப்பது என மதுவிலக்கு ஆய்வாளரிடம் குருசாமி விசாரித்துள்ளார். இதில், முறையாக நீதிமன்றத்தை அணுகுமாறு ஆய்வாளர் ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சாராய வியாபாரி குருசாமி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து மாறுதலாகி கூவத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக சென்ற கோபிநாத் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவில் பணி புரியும் மணிகண்டன் ஆகியோரிடம் குறுக்கு வழியில் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பது தொடர்பாக ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.
இதில், சாராய வியாபாரி குருசாமி, தலைமை காவலர் கோபிநாத்திடம் தன்னுடைய வங்கி கணக்கை விடுவிப்பதற்கு உதவி செய்தால், அதில் உள்ள ஒன்றரை லட்சம் பணம் கமிஷனாக வழங்குவதாக, மேற்கண்ட இரண்டு போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, ஒப்புக்கொண்ட தலைமை காவலர் கோபிநாத் மற்றும் மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் காவலர் மணிகண்டனை தொடர்பு கொண்டு, மதுவிலக்கு ஆய்வாளர் அலுவலக முத்திரையை, ஆய்வாளரின் அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் மற்றும் போலியாக பத்திரம் தயாரித்து மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியாவின் கையெழுத்தை போலியாக போட்டு சாராய வியாபாரிக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த கடிதத்தை, கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மேலாளரிடம் குருசாமி வழங்கியுள்ளார். இந்த கடிதத்தை ஆய்வு செய்த வங்கியின் மேலாளர், மதுவிலக்கு காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், தான் எந்த கடிதமும் கொடுத்து அனுப்பவில்லை என ஆய்வாளர் கூறியுள்ளார். மேலும், சந்தேகத்தின் பேரில் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டபோது, மேற்கண்ட கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளரின் அலுவலக முத்திரையை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக தலைமைக் காவலர் கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும், மாவட்ட எஸ்பி.சாய்பிரணீத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் 2 போலீஸாரே, ஆய்வாளரின் கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்த மோசடி செய்திருப்பது, சக போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.