சிறுவனை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன்

ஷகீர் மற்றும் ரபீக்
ஷகீர் மற்றும் ரபீக்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் சிறுவனை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்.10-ம் தேதி இரவு வளசரவாக்கம் பகுதியில் ஸ்ரீதேவி குப்பம் சாலையில் பாடகர் மனோவின் மகன்களான ஷாகிர் பாபு மற்றும் முகமது ரஃபி ஆகிய இருவரும் ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த சிறுவன் ஒருவரை மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீஸார் பாடகர் மனோவின் மகன்களான ஷாகிர் பாபு மற்றும் முகம்மது ரஃபி, அவர்களது நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாகினர். விக்னேஷ், தர்மா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே, மனோவின் மகன்களை இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கும் வீடியோ ஒன்றும் அதன்பிறகு சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மனோவின் மகன்களான ஷாகிர் பாபு மற்றும் முகமது ரஃபி ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பாக இன்று (செப்.21) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சரஸ்வதி முத்தையா ஆஜராகி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, “இருவரும் ஒரு மாதத்துக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in