பெண் கலைஞருக்கு பாலியல் தொல்லை: பெங்களூருவில் நடன இயக்குநர் ஜானி கைது

பெண் கலைஞருக்கு பாலியல் தொல்லை: பெங்களூருவில் நடன இயக்குநர் ஜானி கைது
Updated on
1 min read

பெங்களூரு: பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகபிரபல நடன இயக்குநர் ஜானி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான ஷேக் ஜானி பாஷா (எ) ஜானிமாஸ்டர் தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது குழுவில் பணியாற்றும் 21 வயது பெண் நடன கலைஞருக்கு ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் ஹைதராபாத் போலீஸில் புகார் அளி்க்கப்பட்டது. அதில் அந்த பெண், ‘‘கடந்த 2019-ம் ஆண்டு ஜானி மாஸ்டர், எனக்கு உதவி நடன இயக்குநர் வேலை கொடுத்தார். படப்பிடிப்புக்காக சென்னை, மும்பைக்கு சென்றிருந்தோம். அப்போது 18 வயது நிரம்பாதநிலையில், திருமண ஆசை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தார்'' என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போலீஸார் ஜானி மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அவரை இடை நீக்கம் செய்த நிலையில், ஜன சேனா கட்சியில் இருந்தும் நீக்கப்ப‌ட்டார். தலைமறைவாக இருந்த ஜானியை ஹைதராபாத் போலீஸார் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர்.

பாஜக எம்எல்ஏ மீது வழக்கு: பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகர் பாஜக எம்எல்ஏவும் திரைப்பட தயாரிப்பாளருமான முனிரத்னா, மாநகராட்சி ஒப்பந்ததாரரை லஞ்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த 42 வயதான பெண் சமூகஆர்வலர், பாஜக எம்எல்ஏ முனிரத்னா உள்ளிட்ட 7 பேர் மீது ராம்நகரா காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார். அதில், ''கடந்த ஆண்டு பாஜக எம்எல்ஏ முனிரத்னா தொகுதி சார்ந்த பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு என்னை ராம்நகராகவில் உள்ள‌ தனியார் விடுதிக்கு அழைத்தார். அங்கு சென்ற போது முனிரத்னா, அவரது நண்பர்கள் கிரண் குமார், விஜய்குமார் உள்ளிட்ட 7 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்’ என கூறியுள்ளார். இதையடுத்து ராமநகரா காவல் துணை ஆணையர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார். அதன்பேரில் முனிரத்னா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in