துறையூரில் அரசு முட்டைகளை உணவு தயாரிக்க பயன்படுத்திய உணவகம். (அடுத்தப்படம்) உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
துறையூரில் அரசு முட்டைகளை உணவு தயாரிக்க பயன்படுத்திய உணவகம். (அடுத்தப்படம்) உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

துறையூர்: ஹோட்டலில் சத்துணவு முட்டைகள்: உணவக உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது

Published on

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு உணவகத்தில் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, சத்துணவு அமைப்பாளர் மற்றும் உணவக உரிமையாளர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அங்கன்வாடி மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் சத்துணவுடன் மாணவ - மாணவியருக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டைகளில் அரசின் முத்திரையிடப்பட்டு இவை சத்துணவு மையங்களுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், துறையூர் - திருச்சி சாலையில் உள்ள உணவகத்தில் சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இது தொடர்பான வீடியோ வைரலானது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உத்தரவின் பேரில் துறையூர் வட்டாட்சியர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் அந்த உணவகத்தில் இன்று சோதனை மேற்கொண்டனர். இதில், அந்த கடையில் பல நாட்களாக சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்த சத்துணவு முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்தனர். அரசு சார்பில் குழந்தைகளுக்கு வழங்க அளிக்கப்பட்ட முட்டைகளை கடைக்கு விற்பனை செய்ததாக மதுராபுரி ஊராட்சி ஒன்றிய சத்துணவு அமைப்பாளர் வசந்த குமாரி (58), உணவக உரிமையாளர் ரத்தினம் (46) ஆகியோரை துறையூர் போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in